ஜாகர்த்தா, மார்ச் 20 – இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது சொந்த
ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக 404 விமானச் சேவைகளை
இந்தோனேசிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள பொது போக்குவரத்து செயலகத்தை
மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி நிறுவனம் இத்தகவலை
வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குத்
திரும்புவோரின் வசதிக்காக 325 விமானங்கள் தேவைப்படும் என நாங்கள்
எதிர்பார்க்கிறோம். நாங்கள் தற்போது 404 விமானங்களைத் தயார்
செய்துள்ள நிலையில் இதன் மூலம் பயணிகளின் அதிகப்பட்ச
எண்ணிக்கையை சமாளிக்க இயலும் என நம்புகிறோம் என்று வான்
போக்குவத்து செயலகத்தின் இடைக்காலத் தலைவர் லுக்மான் எப்.லைசா
கூறினார்.
நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்வோரின்
எண்ணிக்கை கடந்தாண்டு 55 லட்சத்து 29 ஆயிரத்து 659 பேராக இருந்த
நிலையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரித்து 61
லட்சத்து 86 ஆயிரத்து 298 பேராக உயர்வு காணும் என எதிர்பார்க்கிறோம்
என அவர் சொன்னார்.
இந்த பெருநாள் காலத்தில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 49 லட்சத்து
51 ஆயிரத்து 391 பேராகவும் அனைத்துலக பயணிகள் எண்ணிக்கை 12
லட்சத்து 34 ஆயிரத்து 907 பேராகவும் உயர்வு காணும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த பயணிகள் எண்ணிக்கை உயர்வை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள
அனைத்து 60 விமான நிலையங்களிலும் தாங்கள் கண்காணிப்பை
வலுப்படுத்தியுள்ளதோடு விமான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மோசமான வானிலையை எதிர்கொள்வதிலும் தயார் நிலையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.