கோலாலம்பூர், மார்ச் 20 – நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம்
அளிப்பதற்கு ஏதுவாக அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 12,000 கோடி
வெள்ளி மதிப்பிலான உள்நாட்டு நேரடி முதலீடுகளை (டி.டி.ஐ.) பதிவு
செய்யும்படி அரசு சார்பு முதலீட்டு நிறுவனங்களை (ஜி.எல்.ஐ.சி.) பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கான அழுத்தமும் முதன்மை அடைவு நிலைக்கான
குறியீடும் (கே.பி.ஐ.) லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல.
மாறாக ‘கியர்ஆப்‘ எனப்படும் அணுமுறையையும் உள்ளடக்கியுள்ளது என்று
அவர் சொன்னார்.
‘கியர்ஆப்‘ அதாவது ஆறு ஜி.ஐ.எல்.சி. நிறுவனங்களும் தங்கள் முழு
சக்தியை ஒன்று திரட்டி அடுத்த ஐந்தாண்டுகளில் 12,000 கோடி வெள்ளியை
(ஆண்டுக்கு 2,500 கோடி வெள்ளி) திரட்டினால் அங்கீகரிக்கப்பட்ட வரவு
செலவுத் திட்டம் தவிர்த்த பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ய
இயலும் என்றார் அவர்.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிக உயர்ந்த மேம்பாட்டுச் செலவினமாக
இது அமையும் என்று மக்களவையில் இன்று வழங்கிய எழுத்துப்பூர்வப்
பதிலில் பிரதமர் கூறினார்.
2025ஆம் ஆண்டு அரசாங்க வருமான மதிப்பீட்டு லாப ஈவு பங்களிப்பை
வலுப்படுத்துவதற்கு ஏதுவாக ஜி.எல்.சி மற்றும் ஜி.ஐ.எல்.சி. மீது தற்போது
செலுத்தப்படும் கவனம் குறித்து செனட்டர் முஸ்தாபா மூசா கேள்வியெழுப்பியிருந்தார்.