NATIONAL

முஸ்லிம் அல்லாத ஆடவரை அறைந்ததாக நம்பப்படும் முதியவர் மீது மீண்டும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, மார்ச் 20 – ஜோகூரில் உள்ள பல்பொருள் அங்காடி கடையில் உணவருந்திய முஸ்லிம் அல்லாத ஆடவர் ஒருவரை அறைந்ததாக நம்பப்படும் முதியவர், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதாக நேற்று மீண்டும் ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் ஏ. ஷர்மினி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 65 வயதான அப்துல் ரசாக் இஸ்மாயில் மறுத்து விசாரணைக் கோரினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலை மணி 6.15 அளவில், ஜோகூரில் வணிக தளம் ஒன்றின் பல்பொருள் அங்காடி கடையில் உணவருந்திய 22 வயதான எலிஜா லிங் ஸாவ் ஸோங்கை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக அப்துல் ரசாக் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம், 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 323-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

2,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அந்நபரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பெர்னாமா


Pengarang :