கோலாலம்பூர், மார்ச் 20 – இந்திய சிறு தொழில் விபாபாரங்களை மேம்படுத்தும் நோக்கில் I-BAP திட்டத்தின் கீழ், இதுவரை 48 பேருக்கு மொத்தம் 296 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான (KUSKOP), அதன் கீழ் செயல்படும் SME Corp நிறுவனம் வாயிலாக அந்நிதி வழங்கியதாக துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் 31 வரை 100,000 ரிங்கிட் வரையிலான மானியத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதற்கு விண்ணப்பித்தவர்களில் இன்றையத் தேதி வரை 48 பேருக்கு மானியம் அங்கீகரிக்கப்பட்டது. அவர்களில் 26 வணிகர்களுக்கு மானியத்திற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வில் துணையமைச்சர் உரையாற்றினார்.
கோலாலம்புர் SME Corp கட்டடத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், அதன் தலைமை இயக்குநர் டத்தோ ரிசால் நாய்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய சிறு விபாயாரிகள் மற்றும் நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்த வணிக ஆலோசனை சேவை மற்றும் நிதி ஆதரவை இந்த I-BAP திட்டம் வழங்குகிறது.
அவ்வகையில் கடந்தாண்டு கிடைக்கப் பெற்ற ஊக்கமளிக்கும் ஆதரவின் அடிப்படையில், அம்மானியத்தைப் பெறுவதற்கான விண்ணப்பம் மீண்டும் திறக்கப்படுவதாகவும் ரமணன் மகிழ்ச்சி செய்தியை அறிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி இந்திய சிறு வணிகர்கள், இணையம் வாயிலாக அதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதோடு, மேலும் அதிகமான சிறு தொழில் வியாபாரிகள் நன்மைப் பெறுவதற்காக விண்ணப்ப நிபந்தனைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, வருடாந்திர மொத்த வியாபாரத்திற்கான குறைந்தபட்ச அளவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆண்டுக்கு 300,000 ரிங்கிட்டுக்கும் மேல் வருமானம் ஈட்டும் வணிகங்கள் மட்டுமே அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.