Screenshot
NATIONAL

நோன்புப் பெருநாளின்போது 140,000  வாகனங்கள் மேற்கு கடற்கரை விரைவுச் சாலையைப் பயன்படுத்தும்

ஷா ஆலம், மார்ச் 24 –  நெடுஞ்சாலையின் கூடுதல் பிரிவுகள் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து இவ்வாண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது 140,000 வாகனங்கள் மேற்கு கடற்கரை விரைவுச் சாலையை (டபள்யூ.சி.இ.) பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் புத்தாண்டு, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கடந்த கால பண்டிகைகளின் போது   130,000 முதல் 150,000 வரை பதிவான  சராசரி தினசரி போக்குவரத்தின் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளதாக டபள்யூ.சி.இ. பொது நிர்வாகி (வியூகத் தொடர்பு மற்றும் பங்களிப்பாளர் தொடர்பு)  சைட் புகமது இடிட் கூறினார்.
தைப்பிங் செலாத்தான்-பந்திங் தடம்  அதிக வாகனப்  போக்குவரத்தை பதிவு  செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்
இந்த நெடுஞ்சாலையின்  5, 8, 9 மற்றும் 10 ஆகியப் பிரிவுகள்   கடந்த 2019 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்ற பிறகு சராசரி தினசரி போக்குவரத்து  தோராயமாக 60,000 வாகனங்களாக இருந்தன. கடந்த 2023 நவம்பர் 20ஆம் தேதி  அசாம் ஜாவா இணைப்புச் சாலை (பிரிவு திறக்கப்பட்டப் பின்னர் இந்த எண்ணிக்கை 70,000 ஆக உயர்ந்தது.
கடந்தாண்டு மார்ச் 12ஆம் தேதி  ரமலான் பண்டிகையை முன்னிட்டு தைப்பிங் செலத்தான் பிரிவு (பிரிவு 11) தொடங்கப்பட்டதன் மூலம் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்தது.  பேராக் தடம் முழுமையாக  முடிந்தவுடன் வாகன எண்ணிக்கை 80,000 க்கும் மேல் உயர்ந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிலாங்கூரில் பிரிவு 1 பந்திங் மற்றும் பிரிவு 2 கெசாஸ்  இணைப்பு சமீபத்தில் திறக்கப்பட்டதன் மூலம் தற்போதைய சராசரி தினசரி போக்குவரத்து ஏறக்குறைய  90,000 வாகனங்களாக உயர்ந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
பண்டிகைக் காலத்தில் அனைத்து வாகனமோட்டிகளின்  பாதுகாப்பான மற்றும் சிறப்பான  பயணத்தை உறுதி செய்வதில்  தனக்குள்ள கடப்பாட்டை டபள்யூ.சி.இ. மீண்டும் உறுதிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

Pengarang :