புத்ராஜெயா, மார்ச் 24 — கடந்த 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உள்நாட்டு சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து 66.8 லட்சம் சுற்றுப் பயணிகளைப் பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் அவர்கள் செய்த செலவும் 21.9 சதவீதம் அதிகரித்து 2.9 கோடி வெள்ளியை எட்டியுள்ளது என்று புள்ளிவிவரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரத் துறையின் இந்த அறிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மலேசிய உள்நாட்டு சுற்றுலா ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாவின் வலுவான செயல்திறன் நான்காம் காலாண்டிலும் தொடர்ந்தது. இதன் வழி இந்த ஆண்டிற்கான மொத்த சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 26.01 கோடி பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 21.7 சதவீதம் அதிகமாகும் என்று தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார்.
வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் உள்நாட்டு சுற்றுலா செலவினம் 107.2 கோடி வெள்ளியை எட்டியது. இது ஆண்டுக்கு ஆண்டு 26.3 விழுக்காடு என்ற அளவிலான உறுதியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
உள்நாட்டு சுற்றுலா அதிகரித்து வருவதையும் பல முக்கிய தொழில்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்வதையும் இது காட்டுகிறது அவர் கூறினார்.
மிருகக்காட்சிசாலை சுற்றுலா தலங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது வனவிலங்குகள் தொடர்பான அனுபவங்களின் தொடர்ச்சியான ஈர்ப்பை எடுத்துக்காட்டுகிறது.
இதேபோல், உள்நாட்டு பயண நடவடிக்கைகளின் அதிகரிப்பு காரணமாக வாகன எரிபொருளின் சில்லறை விற்பனை 6.7 சதவீதம் வளர்ச்சியடைந்தது.
அதே நேரத்தில் உள்நாட்டு விமான நிலைய வருகை 6.1 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
இதற்கிடையில், ஹோட்டல் துறை மீட்சி நிலையை வெளிப்படுத்தியது. நான்கு நட்சத்திர ஹோட்டல்களின் வர்த்தகம் 5.9 சதவீதம் உயர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.