ஷா ஆலம், மார்ச் 27- நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த
சனிக்கிழமை தொடங்கி ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் மாபெரும்
மலிவு விற்பனையின் வழி 60,000க்கும் மேற்பட்டோர் பயனடைவர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இருபத்தைந்து இடங்களில் நடைபெறவிருக்கும் இந்த மலிவு விற்பனை
பொது மக்கள் குறிப்பாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்
முஸ்லீம்களின் சுமையைக் குறைப்பதில் ஓரளவு உதவி புரியும் என்று
விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம்
கூறினார்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம், கோஹிஜ்ரா சிலாங்கூர்
மற்றும் சிலாங்கூர் மாநில விவசாயப் பொருள் சந்தை வாரியம் ஆகிய
தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளும் இந்த மலிவு விற்பனைக்கு
மொத்தம் 376,000 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என
அவர் தெரிவித்தார்.
பெருநாளின் போது பொது மக்கள் தங்களுக்குத் தேவையான
பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக இந்த மெகா மலிவு விற்பனை
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர்
சொன்னார்.
கோழி, திட இறைச்சி, பி கிரேட் முட்டை மற்றும் ஐந்து கிலோ அரசி
ஆகியவை வெ.2.00 முதல் வெ.6.00 வரை விலைக் கழிவுடன் வழங்கப்படும்
என நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
குறிப்பிட்டார்.
அண்மைய சில ஆண்டுகளாக பெருநாள் காலத்தின் போது இத்தகைய
மெகா மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த விற்பனையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் சந்தையை விட குறைவான விலையில் விற்கப்படுகின்றன.