செர்டாங், மார்ச் 27- இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை
அமலில் இருக்கும் ஓப் பிரிஹாத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கையின் போது
கண்காணிப்பு பணிகளுக்கு அதிக திறன் கொண்ட 28 ட்ரோன்
சாதனங்களை பொது தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) பயன்படுத்தும்.
வாகனப் போக்குவரத்தை ஆக்ககரமான முறையிலும் திறனுடனும்
கண்காணிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் இரு ட்ரோன்கள்
பணியில் ஈடுபடுத்தப்படும் என்று ஏ.பி.எம். தலைமை ஆணையர் டத்தோ
அமினுர்ரஹிம் முகமது கூறினார்.
சாலை போக்குவரத்தைக் கண்காணிப்பது, விபத்து மற்றும் நிலச்சரிவு
அல்லது சாலை பழுது போன்ற அவசர உதவி தேவைப்படும் இடங்களை
அடையாளம் காண்பது போன்ற பணிகளுக்கு இந்த தொழில்நுட்பம்
பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இது தவிர, பணிக்குழுவினர் எளிதில் அணுக முடியாத இடங்களில்
பாதுகாப்பை கண்காணிக்கும் பணியிலும் இந்த ட்ரோன் சாதனங்கள்
பயன்படுத்தப்படும் என்று நேற்று இங்கு ஓப் பிரிஹாத்தின் 2ஆம் கட்ட
இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்.
மொத்தம் 2,364 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த
ஓப் பிரிஹாத்தின் பாதுகாப்பு இயக்கம் சிலாங்கூர், ஜோகூர், கெடா,
திரங்கானு, ஜோகூர், சபா மற்றும் சரவா ஆகிய மண்டலங்களில் இன்று
ஏக காலத்தில் தொடங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இது தவிர சிகாப் முன்னெடுப்பின் கீழ் 15,000 அதிகாரிகள் மற்றும்
உறுப்பினர்கள் அடங்கிய ஏ.பி.எம். தன்னாவலர் குழு இந்த ஓப்
பிரிஹாத்தின் நடவடிக்கைக்கு உதவும் என்றார் அவர்.
இந்த ஓப் பிரிஹாத்தின் நடவடிக்கையின் போது ஏ.பி.எம். உறுப்பினர்களில்
சிலர் நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வு பகுதிகளில் நிறுத்தப்படுவர். அங்கு
அவர்கள் அவச உதவி மற்றும் தீயணைப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகளை பொது மக்களுக்கு வழங்குவர் என அவர் மேலும் சொன்னார்.