புக்கிட் மெர்தாஜம், மார்ச் 27- போதைப் பொருளை உட்கொண்ட நிலையில்
கொள்கலன் லோரி ஓட்டுநர் ஒருவர் பஞ்சரான டயருடன் அந்த லோரியை
பேராக் மாநிலத்தின் தைப்பிங்கிலிருந்து பினாங்கின் பிறை வரை ஓட்டிச்
சென்றுள்ளார்.
எனினும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இதர அரசு துறைகளுடன்
இணைந்து பினாங்கு மாநில சாலை போக்குவரத்து துறை (ஜே.பி.ஜே.)
ஜூரு டோல் சாவடியின் வடக்கு தடத்தில் மேற்கொண்ட சிறப்பு சாலைத்
தடுப்புச் சோதனையில் அந்த 45 வயது ஆடவர் வசமாகச் சிக்கினார்.
அந்த கொள்கலன் லோரி மேல் நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்ட
நிலையில் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் (ஏ.ஏ.டி.கே.)
மேற்கொண்ட சிறுநீர் சோதனையில் அதன் ஓட்டுநர் கஞ்சா போதைப்
பொருளை பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது என்று பினாங்கு
மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் ஜூல்கிப்ளி இஸ்மாயில் கூறினார்.
மேலும் அந்த கொள்கலன் லோரியில் பொருத்தப்பட்டிருந்த சிரிம்
அங்கீகார முத்திரை கொண்ட ரீட்ரிட் எனப்படும் புதுப்பிக்கப்பட்ட டயரின்
நம்பகத் தன்மை குறித்து தாங்கள் சந்தேகம் கொண்டுள்ளதாக அவர்
சொன்னார்.
அந்த லோரியின் டயர் பஞ்சராகியிருக்க க்கூடும். எனினும், போதைப்
பொருளை பயன்படுத்திய காரணத்தால் அதன் ஓட்டுநர் பாதி மயக்கத்தில்
இருந்துள்ளார். அந்த டயர் பஞ்சாராகி மோசமாக சேதமடைந்தது கூட
அவருக்குத் தெரியவில்லை என ஜூல்கிப்ளி தெரிவித்தார்.
டயர் பஞ்சராகி மோசமாக சேதமடைந்த நிலையிலும் அந்த கொள்கலன்
லோரியை தொடர்ந்து செலுத்திய அந்த ஆடவரின் செயல் சம்பந்தப்பட்ட
ஓட்டுநருக்கு மட்டுமின்றி சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும்
மிகவும் ஆபத்தானது என அவர் குறிப்பிட்டார்.
நான்கு மணி நேரத்திற்கு நீடித்த இந்த சாலைத் தடுப்புச் சோதனையில்
அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்,
குடிநுழைவுத் துறை, தரை போக்குவரத்து நிறுவனம் மற்றும் போதைப்
பொருள் தடுப்பு நிறுவனம் ஆகிய தரப்பினரும் பங்கு கொண்டதாக அவர்
கூறினார்.