கோலாலம்பூர், மார்ச் 27- நோன்புப் பெருநாள் விடுமுறையின் போது 27 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் நாட்டிலுள்ள முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என
மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) எதிர்பார்க்கிறது.
இந்த பெருநாள் காலத்தின் உச்ச நாட்களில் மொத்தம் 21 லட்சம் வாகனங்கள் பிளஸ் குழுமத்தின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும். அதற்கு அடுத்த நிலையில் கே.எல். காராக் நெடுஞ்சாலை (216,000), மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை (176,000), கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (எல்.பி.டி.) 1 (156,000) மற்றும் எல்.பி.டி.2 (70,000) ஆகிய நெடுஞ்சாலைகள் உள்ளன என்று எல் எல்.எம். அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வரும் ஏப்ரல் 2 முதல் 4 வரை மலேசிய கல்வி அமைச்சின் கூடுதல் பள்ளி விடுமுறைகளைக் கருத்தில் கொண்டு தலைநகரிலிருந்து நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தலைநகரை நோக்கிய தடங்களில் போக்குவரத்து அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெருநாள் விடுமுறை காலத்தில் நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 7 வரையிலான காலத்தில் அவசரகாலப் பணிகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் நெடுஞ்சாலைகளில் தடங்களை ஒப்பந்த நிறுவனங்கள் மூடாமலிருப்பதை உறுதி செய்வது உட்பட பல நடவடிக்கைகளை எல் எல்.எம். எடுத்துள்ளது.
இது தவிர, பிளஸ் நெடுஞ்சாலையில் அடையாளம் காணப்பட்ட 28 இடங்களில் ஸ்மார்ட் லேன் அவசரத் தடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் வாகனமோட்டிகள் நெரிசலின் போது மாற்றுப் பாதையாக அவசரகாலப் பாதைகளைப் பயன்படுத்தலாம்.
சரக்கு வாகனங்கள் ஓட்டுவதற்கான தடை காலம் மார்ச் 29 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 5 முதல் 6 வரை அமல்படுத்தப்படும். இந்த நடவடிக்கை நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்தை ஓரளவிற்கு மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.