ECONOMYMEDIA STATEMENTSELANGOR

1,000 அடுக்குமாடி வீட்டுப் பகுதிகளில் எல்.இ.டி., சோலார் விளக்குகள் பயன்படுத்தப்படும்

ஷா ஆலம், பிப் 8- கூட்டு நிர்வாக மன்றத்தின் கீழுள்ள 1,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிவான மின் சக்தி சேமிப்புத் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் விவேக அடுக்கக மற்றும் சொத்துடைமை முறை (எஸ்.ஐ.எஸ்.பி.) இவ்வாண்டு அமல்படுத்தப்படும்.

பசுமை தொழில்நுட்பத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இக்குடியிருப்பு பகுதிகளில் கட்டணமின்றி எல்.இ.டி. மற்றும் சோலார் எனப்படும் சூரிய சக்தி விளக்குளைப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இத்தகைய அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் மற்றும் நீர் அழுத்த பம்ப் ஆகியவற்றுக்கு உண்டாகும் செலவை கணக்கிடும் போது இத்திட்டத்தின் கீழ் 80 விழுக்காட்டு மின்சக்தியை சேமிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தொடக்கமாக இத்திட்டம் அடுக்ககங்களில் அமல்படுத்தப்படும். பின்னர், வர்த்தக கட்டிடங்கள், கடை வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாண்டில் மட்டும் 1,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

கிளேன்மேரி கோல்ப் அண்ட் கண்ட்றி கிளப்பில் எஸ்.ஐ.எஸ்.பி. திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எல்.இ.டி. மற்றும் சோலார் விளக்குகளைப் பொருத்துவதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :