NATIONAL

2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டில் வேலைவாய்ப்பு மோசடிக் குற்றங்கள் முக்கியமாக விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், ஏப் 4 – எதிர்வரும்  2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது வலியுறுத்தப்படும் 10 முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் வேலைவாய்ப்பு மோசடி குற்றமும்  இடம்பெறும்.

வேலைவாய்ப்பு மோசடிக் குற்றங்கள்  உலகலாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதால் இவ்விவகாரத்தை முக்கிய நிகழ்ச்சி நிரலில் கொண்டு வர  உச்சநிலை மாநாட்டின் தலைவர் என்ற முறையில்  மலேசியா முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அடுத்தாண்டு நாங்கள் தலைமை தாங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் இந்தத் தலைப்பை சேர்ப்பதில் மிகவும் முன்னோக்கிச் சிந்திக்கும் ஆசியான் நாடாக நாங்கள் விளங்குகிறோம். இந்த மாநாட்டில் இடம்பெற்ற  10 முதன்மை நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக வேலைவாய்ப்பு மோசடி என்ற தலைப்பைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர்கள் நாங்கள்தான் என அவர் சொன்னார்.

இந்த வகையான குற்றங்களை மோசடி மற்றும் குற்றங்கள் என்று ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம்  என்று  முன்பு  வகைப்படுத்தி இருந்தது. ஆனால் இப்போது இந்த குற்றத்தை மனித கடத்தல் குற்றமாக அது அங்கீகரித்துள்ளது. எனவே, இதனை  நாம் மட்டும் அல்ல, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளும் நெருக்கடியாக பார்க்கின்றன என்று அவர் இன்று மேலவையில்  கேள்வி பதில் அமர்வின் அவர் போது கூறினார்.

வேலைவாய்ப்பு  மோசடியால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர் மோசடி பிரச்சனையை மிகவும்  திறம்பட கையாள்வதற்கான அரசாங்கத்தின் செயல் திட்டம் குறித்து  செனட்டர் ரீட்டா சரிமா அனாக் பெட்ரிக் இன்சோல் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த  2021 செப்டம்பர் முதல் இதுவரை 470 பாதிக்கப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 362 புகார்கள் பெறப்பட்டுள்ளது காவல்துறையின் தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட 470 பேரில் 331 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 139 பேர் இன்னும் சம்பந்தப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிப்பதாக வகைப்படுப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


Pengarang :