ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

2040 இல் நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

புத்ரா ஜெயா, அக் 30-முறையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வரும் 2040 ஆம் ஆண்டுவாக்கில் மலேசியர்களில் நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் என்று 2016 ஆம் ஆண்டு உலகலாவிய பக்கவாத நோய்த் தரவு மீதான அனைத்துலக ஆய்வு கூறுகிறது.

இந்த நோய் அபாயத்தை தவிர்ப்பதற்கு பொது மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா வலியுறுத்தினார்.

புகைப்பழக்கம் மற்றும் புகையிலையைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, சத்துணவுகளை மட்டுமே உட்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது, மதுப்பழக்கத்திற்கு ஆட்படாமலிருப்பது போன்ற நடவடிக்கைகள்  மூலம்  பக்கவாத நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.

இது தவிர, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு உதவுவதில் நாம் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். மேலும், இந்நோய்ப் பரவலின் தாக்கத்தை குறைப்பதற்கு ஏதுவாக தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நோயாளிகளுக்கு தரமான சேவையை வழங்குவதில் அனைத்துத் தரப்பினரும் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் முழுபங்களிப்பையும் வழங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு லட்சம் மலேசியர்களில் 150 பேர் பக்கவாத நோய்க்கு ஆளாவதை 2017 ஆம் ஆண்டு மலேசிய பக்கவாத சுமை கண்காணிப்பு பிரிவின் ஆய்வுகள் காட்டுவதாக கூறிய அவர், நாளொன்றுக்கு சராசரி 92 பேர் பக்கவாதம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.

பக்கவாதம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் 40 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பக்காவாதம் காரணமாக தினசரி ஏறக்குறைய 32 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 10 பக்கவாத நோயாளிகளில் எழுவர் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பிறரின் உதவியை சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர் என்றார் அவர்.


Pengarang :