ஷா ஆலம், மார்ச் 22: நேற்று ஆலம் இம்பியானில் நடைபெற்ற பஜார் ஹிஜ்ராவில் பொதுமக்களுக்கு RM10 மதிப்புள்ள 500 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன.

ரம்ஜான் மாதம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பஜார்களில் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (பிளாட்ஸ்) மாசோக் பஜார் பிரச்சாரத்தை முன்னிட்டு இந்த கூப்பன்கள் விநியோகிக்கப்படும் என்று தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

“இந்த நடவடிக்கை பிளாட்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் மூலம், வணிகர்கள் தங்கள் வணிகத்தை டிஜிட்டல் மய மாக்குவதற்காக இணையக் கட்டண முறைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவர்.

வணிக டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வணிகர்கள் தற்போதைய விரைவான தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என்று நஜ்வான் கூறினார்.

முன்னதாக, ரம்ஜான் மாதம் முழுவதும் இப்பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்வதற்காக RM40,000 ஒதுக்கியதாக எம்பிஐ அறிவித்தது.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி , ஷா ஆலம் மாநகராட்சி மற்றும் காஜாங் நகராண்மை கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பஜார்களில் பொதுமக்களுக்கு RM10 மதிப்புள்ள டிஜிட்டல் ரஹ்மா கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன என்று எம்பிஐ கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனால் கூறினார்.

தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க உதவும் வகையில், பிளாட்ஸ் தொழில்முனைவோர் பயிற்சித் திட்டம் (U-PLATS) என்ற புதிய திட்டத்தையும் பிளாட்ஸ் அறிமுகப்படுத்தியது.