NATIONALSELANGOR

அனைத்து துறைகளின் ஒத்துழைப்பினால் பெட்டாலிங் மாவட்டத்தில் கோவிட்-19 எண்ணிக்கை குறைந்தது

ஷா ஆலம், செப் 2 – போலீஸ், சுகாதாரப் பணியாளர்கள், தற்காப்புப் படை மற்றும் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பின் காரணமாக பெட்டாலிங் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அபரிமிதாக  குறைந்தது.

செப்டம்பர் முதல் தேதி வரை இறக்குமதி செய்யப்பட்ட ஒரே கோவிட்-19 சம்பவம் பெட்டாலிங் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட அதிகாரி ஜோஹாரி அனுவார் கூறினார்.

ஒரு சமயத்தில் நமது மாவட்டத்தில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகூட அமல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அனைத்துத் தரப்பினரின் கடுமையான முயற்சி காரணமாக அந்த இக்கட்டான காலக் கட்டத்தை நாம் கடந்து விட்டோம் என்றார் அவர்.

அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு மட்டும் இல்லாவிடில் தடுப்பு நடவடிக்கைகளை நம்மால் ஆக்ககரமான முறையில் அமல்படுத்தியிருக்க முடியாது. கோவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருவதற்கு அனைத்து துறைகளின் ஒத்துழைப்பே காரணம் என்பது நிரூபணமாகி விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

பெட்டாலிங் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய தின மற்றும் மலேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 10ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஓத்மான் சந்தைப் பகுதியில் 14 நாட்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப் பட்டது.

இந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளைச் சேர்ந்த 2,900 பேரை உள்ளடக்கியிருந்தது.

 


Pengarang :