SELANGOR

போலீஸ் சோதனையில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் இராணுவ வீரர் உள்பட ஐவர் கைது

ஷா ஆலம், செப் 3- கிளானா ஜெயாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இராணுவ வீரர் ஒருவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 30 கிலோ எடை கொண்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில்  போலீஸ் குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் அப்பகுதியில் அதிரடி சோதனையை நடத்தியதாகச் சிலாங்கூர் மாநிலப் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணைத் தலைவர் சூப்பிரண்ட்.  அப்துல் லத்தீப் அப்துல் ரஹ்மான் கூறினார்.

அச்சோதனையின் போது 24 வயதுடைய இரு இளைஞர்களும் கார்ப்ரல் பதவி வகிக்கும் 32 வயதுடைய இராணுவ வீரரும் ஒரு காரில் அமர்ந்திருப்பதைப் போலீஸார் கண்டனர். அக்காரைச் சோதனையிட்ட போது அதில் 75,000 வெள்ளி மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மற்றொரு காரில் இருந்த 25 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட போதைப்பொருளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் அவர்கள் அங்கு வந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாகச் சொன்னார்.

மேற்கு கரை மாநிலத்திலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படும் அந்தப் போதைப்பொருள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் விநியோகிக்கப்படவிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று  அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 1952ஆம் ஆண்டின் அபாயகரப் போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :