SELANGOR

சிலாங்கூர்-கோலாலம்பூரின் ஏழு பகுதிகளில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், செப் 3- நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களை இன்று காலை மூடப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தால் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரின் ஏழு பகுதிகளில் தற்காலிகக் குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

சுங்கை சிலாங்கூர் ஆற்று நீர் மாசடைந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனத்தின் தொடர்புப் பிரிவுத் தலைவர் எலினா பஸ்ரி கூறினார்.

அட்டவணையிடப்படாத இந்த நீர் விநியோகத் தடை கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோலசிலாங்கூர், உலுசிலாங்கூர், கோம்பாக், மற்றும் கோல லங்காட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையம் இன்று காலை 7.15 மணிக்கும் சுங்கை சிலாங்கூர் சுத்திகரிப்பு மையத்தின் ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவுகள் காலை 9.00 மணிக்கும் மூடப்பட்டதாக அவர் சொன்னார்.

நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான பட்டியல் தொடர்ந்து ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :