SELANGOR

சுங்கை சிலாங்கூர் ஆற்றின் தூய்மைக்கேட்டிற்கு காரணமான தொழிற்சாலைக்குச் சீல் வைப்பு

ரவாங், செப் 4- சுங்கை சிலாங்கூர் ஆற்றின் தூய்மைக்கேட்டிற்குக் காரணம் என நம்பப்படும் கனரக இயந்திரப் பராமரிப்பு தொழிற்சாலைக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.அந்தத் தொழிற்சாலை பயன்படுத்தப்பட்ட எண்ணெயைச் சேமித்து வைப்பதில் முறையான வழி முறையைப் பின்பற்றவில்லை என்பது லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் தொடக்க  நிலை விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
ஹீய் லோய் சீயான் கூறினார்.

விசாரணை முடியும் வரை அந்தத் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளோம். துர்நாற்றத்துடன் கூடிய திரவமும் ஆற்று நீரில் கலப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்தத் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை லுவாஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே குற்றத்திற்காக இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே 60,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் அதே தவறை அது மீண்டும் செய்துள்ளது என்றார்.

சுங்கை சிலாங்கூர் ஆற்றில் நேற்று தூய்மைக்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏழு பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது. இந்த நீர் விநியோகத் தடை காரணமாகச் சுமார் 12 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன.


Pengarang :