SELANGOR

நீரை பகிர்ந்தளிக்கும் பணிகள் சீரானவுடன் நீர் விநியோகம் தொடர்பாக அறிவிக்கப்படும்

ஷா ஆலம், செப் 5- தூய்மைக்கேடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூடப்பட்ட நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நேற்றிரவு 10.30 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கின.

சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தம் செய்வது மற்றும் நீர்த்தேக்க குளங்களில் நான்கு மீட்டர் அளவுக்கு நீரை நிரப்புவது போன்ற பணிகள் இன்று காலை 8.30 வரை மேற்கொள்ளப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றின் வழி கூறியது.

நீரை பகிர்ந்தளிக்கும் பணிகள் சீரானவுடன் நீர் விநியோகம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அது தெரிவித்தது.

காலியாக உள்ள அனைத்து நீர் சேகரிப்பு டாங்கிகளையும் நிரப்புவது, நீர் அழுத்தத்தை உறுதி செய்தது, அனைத்து குழாய்களிலும் காற்று அடைப்பு இல்லாதிருப்பதை உறுதி செய்வது போன்ற பணிகளுக்கு பின்னரே நீர் விநியோகம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பஸ்ரி கூறினார்.

ரவாங்கிலுள்ள இயந்திர மற்றும் கனரக வாகன பராமரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட எண்ணெயை கசிவு சுங்கை கோங் ஆற்றில் கலந்ததைத் தொடந்து அந்த நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நேற்று முன்தினம் காலை 9.00 மணி முதல் மூடப்பட்டன.

 

 

 


Pengarang :