NATIONAL

நீர் தூய்மைக்கேட்டுக்குக் காரணமான தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்கு ஆறு நாள் தடுப்பு காவல்

கோலாலம்பூர், செப் 5-  ரவாங், சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக்கேடு
ஏற்படுவதற்குக் காரணம் என நம்பப்படும் தொழிற்சாலையின்
உரிமையாளர்கள் நால்வர் விசாரணைக்காக ஆறு நாள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த நால்வரையும் இன்று தொடங்கி வரும் வியாழக்கிழமை வரை
தடுத்து வைப்பதற்கான அனுமதியைச் செலாயாங் மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் வழங்கியதாகச் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர்
டத்தோ நூர் அஸாம் ஜமாலுடின் கூறினார்.

அந்த நான்கு சகோதரர்களையும் விசாரணைக்காக  ஆறு நாட்கள்
தடுத்து வைப்பதற்கான ஆணையை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி
நூருல் மார்டியா முகமது ரெட்சாவிடமிருந்து நாங்கள் பெற்றுள்ளோம்
என்றார் அவர்.

சகோதரர்களான 50 வயது முதல் 60 வயது வரையிலான அந்த
நால்வரும் தங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு அந்தத்
தொழிற்சாலையை நடத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் உள்ள நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுப்
பல லட்சம் குடும்பங்களுக்கு நீர் விநியோகம் தடை படுவதற்குக்
காரணமான அந்தத் தொழிற்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டு உடனடி
அபராதம் விதிக்கப்பட்டதோடு மேலும் கடுமையான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.

அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ஆற்று நீர் சுங்கை
செம்பா வழியாகச் சுங்கை சிலாங்கூர் ஆற்றில் கலக்கிறது.


Pengarang :