Petugas Pejabat Kesihatan KLIA menjalankan tugas menyaring pengembara luar negara di pintu masuk negara pada 6 September 2020. Foto Facebook Noor Hisham Abdullah
SELANGOR

மருத்துவ சுற்றுலாத்துறைக்கு புதிய உத்வேகம் தேவை

கோலாலம்பூர், செப் 9- மலேசியா உலகத் தரம் வாய்ந்த சுகாதாரச் சேவைகளை வழங்கி வருகிறது. சுகாதார பராமரிப்பு தொடர்பில் நாம் பெற்றுள்ள உலகலாவிய நிலையிலான  அங்கீகாரங்கள் இதற்கு ஒரு சான்றாகும்

நமக்கு கிடைத்த இண்டர்நேஷனல் மெடிக்கல் டிராவல் ஜெர்னல் முதன்மை விருது, 2019ஆம் ஆண்டிற்கான சுகாதாரம் மற்றும் மருத்துவச் சுற்றுலாவுக்கான விருது போன்றவற்றை உதாணமாக குறிப்பிடலாம்.

சுகாதாரம் மற்றும் மருத்துவச் சுற்றுலாவுக்கான விருதை மலேசியா 2017,2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, கடந்த 2019ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கான மிகவும் பிரசித்தி பெற்ற ‘டெஸ்தினேஷன் அப் தி இயர்‘ விருதையும் மலேசியா பெற்றது.

அமெரிக்க சஞ்சிகையான  ’இண்டர்நேஷனல் லிவிங்’, சுகாதார பாதுகாப்பு பிரிவில் மலேசியாவை கடந்த 2015 முதல் 2019 வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து முதலிடத்தில் வைத்துள்ளதாக மலேசிய மருத்துவச் சுற்றுலா மன்றத்தின் தலைமை செயல் முறை அதிகாரி ஷெரின் அஸ்லி பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்த சுகாதார சுற்றுலாத் துறை நேர்மறையான வளர்ச்சியைக் கண்டு வருவாக கூறிய அவர், கடந்த ஐந்தாண்டு காலத்தில் வருடாந்திர வளர்ச்சியாக 17 விழுக்காட்டைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

இந்த சிறப்பான அடைவு நிலையின் காரணமாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்  எலும்பியல், இருதயம், நரம்பியல், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்காக சிகிச்சை பெற மலேசியா வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

யாரும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மற்றத் துறைகளைப் போலவே மருத்துவச் சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டதாகவும் ஷெரின் சொன்னார்.

மருத்துவச் சுற்றுலா மூலம் இவ்வாண்டில் 200 கோடி வெள்ளியை வருமானமாகவும் 1,000 கோடி வெள்ளியை இதர வகை பொருளாதார விளைவுகள் மூலமாகவும் ஈட்ட திட்டமிட்டிருந்தோம். எனினும் கோவிட் நோய்த் தொற்று காரணமாக தற்போது அந்த வருமான இலக்கை 50 கோடி வெள்ளியாகவும் பொருளாதார விளைவுகளின் மதிப்பை 300 கோடி வெள்ளியாகவும் மறு மதிப்பீடு செய்துள்ளோம் என்றார் அவர்.

 


Pengarang :