NATIONAL

42 லட்சம் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை

கோலாலம்பூர், செப் 10- நாட்டில் வாக்களிக்கும் தகுதி கொண்ட 21 வயதைக் கடந்த  42 லட்சம் பேர்  இன்னும் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை என்று பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டங்கள்) துணையமைச்சர் டத்தோ ஷாபுடின் யாஹ்யா கூறினார்.

நாட்டில் வாக்களிக்கும் தகுதி கொண்ட மொத்த மக்கள்  தொகையில் இது 22 விழுக்காடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் 21 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 42 லட்சம் பேர் இன்னும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை. அனைத்துத் தரப்பினரும் உரியப் பங்கினை ஆற்ற வேண்டிய முக்கியப் பிரச்னை இதுவாகும் என அவர்  மேலும் சொன்னார்.

தற்போது நம்மிடம் 21 வயதுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு கோடியே பதினைந்து லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 18 வயதில் வாக்களிக்கும் முறையை நாம் அமல்படுத்தினால் வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அறுபது முதல் எழுபது லட்சமாக உயரும் என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கும் வயதை 18ஆக நிர்ணயிக்கும் திட்டத்திற்குத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய வாக்காளர்களை ஈர்க்க எத்தகைய திட்டங்களை அரசாங்கம் கொண்டிருக்கிறது என்ற செனட்டர் இஸ்மாயில் யாக்கோப் கேள்வி எழுப்பியிருந்தார்.

வாக்காளர்களாக இன்னும் பதிந்து கொள்ளாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை நாம் தேர்தல் ஆணையத்திடம் மட்டும் விட்டு விடக்கூடாது. இந்தப் பணியை அரசு சாரா அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று துணையமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்,

 


Pengarang :