SELANGOR

ஆற்று தூய்மைக்கேட்டைக் கண்காணிக்க ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்

ஷா ஆலம், செப் 10- ஆறுகளை கண்காணிக்க ட்ரோன் எனப்படும் சிறிய வகை வானூர்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஆறுகள் வழியாக செல்லும் நீர் மாசுபடும் சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இரு முக்கிய நதிகளான சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட் ஆகியவற்றை ட்ரோன் சாதனம் மூலம் கண்காணிக்கும்  சிறப்பு  குழுவின்  உருவாக்கம் தொடர்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விகாரத்தில் நமக்கு கூடுதல் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. ஆற்று நீரை சோதிக்கவும் மனிதர்களின் உதவியின்றி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கூடிய திறன் கொண்ட தரப்பினருடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

இந்நோக்கத்திற்காக தாங்கள் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் நம்மால் ஆற்று தூய்மைக்கேட்டை கண்டு பிடிக்க முடியும். எனினும், துர்நாற்றம் தொடர்பான தூய்மைக்கேடு நமக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. ஏனென்றால் வாடையை நுகரும் ஆற்றல் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இரவு இங்கு நடைபெற்ற தி அமின் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தூய்மைக்கேட்டை கண்டறியும் கருவிகளை ஆற்றில் பொருத்துவது குறித்து கருத்துரைத்த அவர், லுவாஸ் எனப்படும் நீர் நிர்வாக வாரியம் 5 முதல் 10  இடங்களில் அக்கருவிகளைப் பொருத்தியதாகவும் எனினும் வேகமான  நீரோட்டம் காரணமாக அதன் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டதோடு ஆற்றில் உள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகச் சொன்னார்.

 

 


Pengarang :