SELANGOR

பத்து ஆராங் புதிய சுற்றுலா மையமாக உருவாகும் சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கை

ஷா ஆலம், செப் 10- ரவாங் அருகே உள்ள பத்து ஆராங்கை புதிய சுற்றுலா மையமாக உருவாக்குவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறியுள்ளார்.

சுற்றுப்பயணிகளுக்கு, குறிப்பாக கரடுமுரடான பாதைகளில் சைக்கிளோட்டத்தை மேற்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு,  இது உகந்த இடமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த நகர் வார இறுதி நாட்களில்  சைக்கிளோட்டிகளால் நிரம்பி வழியும் நகரமாக காணப்படுவதாக அவர் கூறினார்.

பத்து ஆராங் நகர் சிலாங்கூர் மாநிலத்தின் சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுவிட்டது. இந்த பகுதியை பிரபலப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இதுதவிர, அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கும் இந்த வரலாற்றுப் பின்னணியை அவர்கள் அறிந்து கொள்வதற்கும்  ஏதுவாக இணையத் தளம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்நகர் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்று விளங்கியது. நிலக்கரியின் விலை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து பல சுரங்கங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் இந்நகரை பிரபலப்படுத்துதற்கான முயற்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.

தங்கும் வசதியை மேம்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், உள்நாட்டுச் சுற்றுப்பயணிகள் அதிகளவில் இங்கு வருவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக கூறினார்.

 

 


Pengarang :