NATIONAL

உப்பில் அயோடின் சேர்க்கப்பட்ட வேண்டும் சுகாதாரத் துறை உத்தரவு

கோலாலம்பூர், செப் 25- பொடியாக்கப்பட்ட உப்பு மற்றும் 20 கிலோவுக்கும்
குறையாத இதர உப்பு வகைகளை பொதுமக்களிடம் விற்பதற்கு முன்னர்
அவற்றில் அயோடின் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை
உத்தரவிட்டுள்ளது.

ஆரம்ப பள்ளிகளில் பயிலும் 8 முதல் 10 வயது வரையிலான 48.2 விழுக்காட்டு
மாணவர்கள் மத்தியில் அயோடின் குறைவாக காணப்படுவது ஆய்வில் தெரிய
வந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை
தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இது தவிர 2.1 விழுக்காட்டு மாணவர்கள் கழுத்தில் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடிய
முன் கழுத்து கழலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பணிப் பெண்கள்
மற்றும் மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களின்
உணவில் அயோடின் அளவு போதுமானதாக இல்லை என்பது
கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

நம் நாட்டில் அனைத்து நிலையிலான மக்களின் உணவில் சேர்க்கப்படும்
அத்தியாவசியப் பொருளாக உப்பு விளங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதில்
அயோடினை சேர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படும் குறைபாட்டை நிவர்த்தி செய்ய
முடியும் என்று நோர் ஹிஷாம் சொன்னார்.

இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும்
பணியில் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின்
அமலாக்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கைளை மேற்கொள்வர் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் அமைச்சு செய்துள்ள விதிமுறை திருத்தங்களை பின்பற்றி
நடக்காத வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பத்தாயிரம் வெள்ளி
வரையிலான அபராதம் அல்லது ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை
விதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

எனினும், உணவில் அதிகமான உப்பை சேர்ப்பது உயர் இரத்த அழுத்த நோய்க்கு
வழி வகுக்கும் என்பதால் பொதுமக்கள் உப்பின் பயனீட்டு அளவை கட்டுப்பாட்டில்
வைத்திருப்பது அவசியம் என்று அவர் நினைவுறுத்தினார்.


Pengarang :