SELANGORSENI

அடுக்குமாடி குடியிருப்பு பசுமைத் திட்டத்தை அமல்படுத்த 100,000 வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், டிச 29- அடுக்குமாடி குடியிருப்பு பசுமை பக்கத் திட்டத்தை அடுத்தாண்டில் அமல்படுத்த ஒரு லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற நல்வாழ்த்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

குடியிருப்பாளர்கள் மத்தியில் ஊக்கமூட்டும் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்திற்கான நிதி இன்னும் அதிகரிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த திட்டம் எந்த அளவுக்கு ஆக்ககரமாக செயல்படுகிறது என்பதை முதலில் காண விரும்புகிறோம். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள மானியம் 12 பகுதிகளில் பசுமைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு போதுமானது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அளவிலான அடுக்குமாடி குடியிருப்பு பசுமைத் திட்டம் 2.0 பயிற்சிக் கருத்தரங்கை நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பசுமைத் திட்டத்தில் தீவிர ஈடுபாடு காட்டும் தரப்பினரை அங்கீகரிக்கும் நோக்கில் போட்டிகளும் நடத்தப்படும் என அவர் சொன்னார்.

இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலும்  தரை மற்றும் தொடர் வீட்டுப்பகுதிகளில் அதிகமாக நடத்தப்படும். ஆகவே நாம் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த பசுமைத் திட்டத்தின் வாயிலாக குடியிருப்பாளர்கள் மத்தியில் நட்புறவை அதிகரிக்கும் அதேவேளையில் இத்திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் விளைபொருள்கள் மூலம் வருமானமும் ஈட்ட முடியும் என்றார் அவர்.


Pengarang :