Logo SUKMA XX JOHOR 2020

சுக்மா விளையாட்டாளர்களுக்கான வயது வரம்பை விரைந்து நிர்ணயிக்கக் கோரிக்கை

ஷா ஆலம், பிப் 16- ஜோகூர் மாநிலத்தில் வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் சுக்மா எனப்படும் மலேசிய போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களுக்கான வயது வரம்பை விரைந்து நிர்ணயிக்கும்படி இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அந்த போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி உள்ள விளையாட்டாளர்களை உறுதி செய்வதற்காக உயர் மட்டக் குழுவின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குனர் முகமது நிசாம் மர்ஜூ்கி கூறினார். 

விளையாட்டாளர்களுக்கான வயது வரம்பு தொடர்பான விதிமுறைகளை நாங்கள் இன்னும் பெறவில்லை. விளையாட்டு வாரியக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற போதிலும் அதன் விபரங்களை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை என்று அவர் சொன்னார்.

ஆகவே, விளையாட்டாளர்களை தயார் படுத்துவதற்கு ஏதுவாக இவ்விவகாரம் தொடர்பில் விரைந்து முடிவெடுக்கும்படி சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று என்றார் அவர்.

கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறவிருந்த சுக்மா போட்டி கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு சுக்மா போட்டியை ஏற்று நடத்த ஜோகூர் மாநிலத்திற்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  திட்டமிடல், நிர்வாகம், நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற அம்சங்களில் 99 விழுக்காட்டு தயார் நிலையில் அம்மாநிலம் உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கான வயது வரம்பு 21 வயது ஆகும். எனினும், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கு வயது வரம்பு 15ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





Pengarang :