NATIONAL

முதல் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர்

புத்ரா ஜெயா, பிப் 16-  தேசிய  கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டமாக தடுப்பூசி பெறுவோரில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெற்றிருப்பர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார். கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு செயல் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடிமட்ட சமூகத்துடன் எந்நேரமும் அணுக்கமாக இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றார் அவர்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடர்பான வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது.  இத்திட்டத்தின் முதல் நாளன்று முன்களப் பணியாளர்களோடு பிரதமரும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சரான கைரி ஜமாலுடின்  மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா ஆகியோர் பேச்சு நடத்துவர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Pengarang :