NATIONAL

கோவிட்-19 பரவலைத் தடுக்க மாநில எல்லைகளில் போலீஸ் சோதனை கடுமையாக்கப்படும்

கோலாலம்பூர், மார்ச் 12– கோவிட்-19 நோய்ப் பரவலைக் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள மாநில எல்லைகளில்   சாலை தடுப்பு சோதனை நடவடிக்கைகளை அரச  மலேசிய போலீஸ் படை கடுமையாக்கவுள்ளது.

மாநிலங்களுக்கிடையிலான நோய்த் தொற்று மையம் உருவாகாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

சாலைத் தடுப்புகளில் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்கள் அலட்சியாக செயல்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக அவர் சொன்னார்.

இதனைக் கருத்தில் கொண்டு சாலைத் தடுப்புகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி அனைத்து மாநில போலீஸ் தலைவர்களும் பணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்குக் கரை மாநிலங்களுக்கு மக்கள் கள்ளத்தனமான முறையில் பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. நாளை பேராக் மற்றும் பினாங்கு எல்லைகளை கடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். ஆகவே, இந்த சோதனை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதை உறுதி செய்யவுள்ளேன். புக்கிட் அமான் அதிகாரிகளும் இச்சோதனைகளை கண்காணிப்பர் என்றார் அவர்.

இவ்விவகாரத்தில் அரச மலேசிய போலீஸ் படை குறைகூறலுக்குள்ளாவதைக் காண நான் விரும்பவில்லை. முன்பு ஏற்பட்டதைப் போல் எல்லைகளுக்கிடையிலான நோய்த் தொற்று மையம் தோன்றுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

சாலைத் தடுப்புகளில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் கூடாரங்களில் அமர்ந்து கொண்டிருப்பதோடு வாகனங்களை சோதனையிடாமல் கையசைத்து அனுப்பிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :