கிராமத் தலைவர் பதவிக்கு 16 மகளிர் நியமனம்- ரோட்சியா தகவல்

ஷா ஆலம், ஏப் 1- கிராமத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படும் மகளிரின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர்புற நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

சமுதாய மேம்பாட்டில் மகளிரின் பங்களிப்பு பெருமையளிக்கும் வகையில் உள்ளதை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுவதாக அவர் சொன்னார்.

பதவி நியமனங்களில் ஆண், பெண் பாகுபாட்டை மாநில அரசு பார்ப்பதில்லை என்பதை இந்த நியமனம் புலப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த தவணையின் போது கிராமத் தலைவர் பதவிக்கு ஐந்து மகளிர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இப்போது அந்த எண்ணிக்கை 16ஆக உயர்வு கண்டுள்ளது. வழக்கமாக கிராமத் தலைவர் பதவியை வகிப்பவர்கள் வயதானவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் இப்போது 34 வயது நிரம்பிய பெண்கூட அப்பதவியை வெற்றிகரமாக வகித்து வருவதை காண முடிகிறது என்றார் அவர்.

இங்குள்ள ரஹ்மான் புத்ரா கிளப்பில் நேற்று நடைபெற்ற பாயா ஜெராஸ் தொகுதி நிலையிலான அனைத்துலக மகளிர் தின நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரிலுள்ள 122 ஊராட்சி ன்ற உறுப்பினர்களில் 37 பேர் மகளிர் எனக் கூறிய அவர், இந்த நியமனம் மகளிருக்கு பெருமையளிப்பதாக உள்ளது என்றார்.

 


Pengarang :