இரு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு- வெ. 1.7 கோடி போதைப் பொருள் பறிமுதல

ஷா ஆலம், ஏப் 26– கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் போலீசார் மேற்கொண்ட 10 சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருளை விநியோகம் செய்யும் மற்றும் பதனிடும்  நடவடிக்கையில் ஈடுபட்ட இரு கும்பல்கள் முறிடியடிக்கப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கைகளில் 1 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக தேசிய போலீஸ் படைத்  துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

இச்சோதனை நடவடிக்கைகளில் 24 வயது முதல் 47 வயது வரையிலான நான்கு வங்காளதேசிகள் மற்றும் ஒரு பெண் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு பிரிவும் சிலாங்கூர் மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து காஜாங் மற்றும் பண்டமாரானில்  மேற்கொண்ட ஏழு சோதனை நடவடிக்கைகளில் 1 கோடியே 52 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 134 கிலோ எடை கொண்ட 354 ஹெரோய்ன் கட்டிகளும் 104.2 கிலோ ஷாபு வகை போதைப் பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இக்கும்பல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறிய அவர், கிளந்தானிலுள்ள சட்டவிரோத படகுத் துறைகள் வாயிலாக தென் தாய்லாந்திலிருந்து இந்த போதைப் பொருள் கடத்தி வரப்பட்டதாகவும் சொன்னார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று இடங்களை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது  நடவடிக்கையில் ரவாங்கிலுள்ள கெத்தாமின் போதைப் பொருள் பதனீட்டு மையத்தின் நடவடிக்கைகள் அம்பலத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கைகளில் 23 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள  22.015 கிலோ போதைப் பொருள், 37.15 கிலோ கெத்தாமின் என நம்பப்படும் திரவம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

போதைப் பொருளை பதனிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இந்நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :