மக்கள் தொகை கணக்கெடுப்பில் 50 விழுக்காட்டினர் மட்டுமே பங்கேற்பு

குவாந்தான், ஏப் 27- நாட்டிலுள்ள 3 கோடியே 27 லட்சம் பேரில் சுமார் 50.9 விழுக்காட்டினர் அதாவது 1 கோடியே 66 லட்சம் பேர் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதுவரை பங்கேற்றுள்ளதாக தேசிய புள்ளிவிபரத் துறையின் துணைத் தலைவர் டத்தின்ஸ்ரீ ரோசித்தா தல்ஹா கூறினார்.

2020ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைவதற்கு இன்னும் 64 நாட்கள் மட்டுமே உள்ளதால்  அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி மலேசியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டிலுள்ள மக்கள் தொகையில் பாதிபேர் இன்னும் கணக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. இ-சென்சஸ் பாரங்களை பூர்த்தி செய்வதன் வாயிலாக அல்லது வீடுகளுக்கு நேரில் வரும் கணக்கெடுப்பாளர்களிடம் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை தருவதன் மூலமாக இத்திட்டத்திற்கு உதவுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

2020ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏறக்குறைய முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதால் அதனை முழுமையடையச் செய்யும் கடப்பாடு நமக்கு உள்ளது. இந்த கணக்கெடுப்பு கடந்தாண்டு ஜூலை மாதமே முடிவுக்கு வந்திருக்க வேண்டும். எனினும்,  கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது தாமதமானது என்று அவர் மேலும் சொன்னார்.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை தாங்கள் மிகவும் முக்கியமானதாக கருதுவதாகக் கூறிய அவர், ஒவ்வொரு இடம் மற்றும் மாவட்டங்களின் மேம்பாடு, திட்டமிடல்  பணிகளுக்கு இந்த கணக்கெடுப்பு  மிக  அவசியமாக தேவைப்படுகிறது என்றார்.

இங்குள்ள இண்ட்ரா மக்கோத்தா 21 வீடமைப்பு பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பங்கு கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கணக்கெடுப்பு பணிக்காக நாடு முழுவதும் பத்தாயிரம் கணக்கெடுப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :