SELANGOR

கால்நடை வளர்ப்போருக்கு வெ.230,000 செலவில் கால்நடைத் தீவனம் விநியோகம்

சபாக் பெர்ணம், செப் 11- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 303 கால்நடை வளர்ப்போருக்கு 230,000 வெள்ளி செலவில்  கால்நடைத் தீவனங்களை மாநில அரசு வழங்கியது.

கால்நடை வளர்ப்போரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக இந்த கால்நடைத் தீவன விநியோகத் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக  விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைத்  தீவனங்களுக்கான விலையும் அபரிமித உயர்வைக் கண்டு வருவது தங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கால்நடை வளர்ப்போர் புகார் கூறியுள்ளதாக அவர் சொன்னார்.

கால்நடை வளர்ப்போரின் பண்ணை அளவைப் பொறுத்து 65 கிலோ எடைகொண்ட 50 வெள்ளி மதிப்பிலான கால்நடைத் தீவனங்களை அவர்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.

சுங்கை நிபோங், கால்நடைப் பொருள் விநியோக மற்றும் சேகரிப்பு மையத்தில்  பத்து கால்நடை வளர்ப்போருக்கு தீவனங்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அமல்படுத்துவற்கு 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜனவரி 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :