PENDIDIKANSELANGOR

இலவச இணைய தரவு சலுகை- 2,000 மாணவர்களின் மேல்முறையீடு பரிசீலிக்கப்படும்

ஷா ஆலம், செப் 11- இலவச இணைய தரவு சலுகையைப் பெறுவதற்கு  சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள மேலும் 2,000 மாணவர்கள் செய்துள்ள விண்ணப்பத்தை சிலாங்கூர் மந்திரி கழகம் (எம்.பி.ஐ.) பரிசீலனை செய்யும்.

அந்த டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள 9,000 மாணவர்களில் 7,000 பேர் இலவச இணையச் சேவைக்கான சிம் கார்டுகளைப் பெற தகுதி பெற்றுள்ளதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இந்த இலவச இணைய தரவு சலுகைத் திட்டத்திற்கு 7,000 சிம் கார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 9,000 ஆக உள்ளது. ஆகவே, மேல் முறையீட்டு நடவடிக்கையின் வாயிலாக எஞ்சியுள்ள மாணவர்களுக்கு உதவ நாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என்றார் அவர்.

இதுவரை 500 மாணவர்கள் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறிய அவர், கல்விநடவடிக்கை சீராக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற வேண்டும் என்பதே தங்களின் நோக்கமாகும் என்றார்.

இவ்வாண்டு இறுதியில் மாணவர்கள் இலவச இணைய தரவு சேவையைப் பெறுவர். ஓராண்டு காலத்திற்கு அவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச இணைய தரவு சேவையை பெறுவதற்கு ஏதுவாக மாநிலத்திலுள் 70,000 பேருக்கு சிம் கார்டுகள் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தமாதம் 4ஆம் தேதி கூறியிருந்தார்.

சிலாங்கூர் டியூஷன் ராக்யாட், யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தில் கடன் பெற்ற மாணவர்கள், சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழக மற்றும் யுனிசெல் பல்கலைக்கழகம் இந்த சலுகையைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.


Pengarang :