ACTIVITIES AND ADSSELANGOR

994 மாற்றுத் திறனாளிகள் 500 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்

ஷா ஆலம், செப் 29- தகுதி பெற்ற 994 மாற்றுத் திறனாளிகளுக்கு 500 வெள்ளி உதவித் தொகையை யாவாஸ் அறவாரியம் இதுவரை வழங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 5 ஆம் தேதி முதல் இதுரை 497,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக அனிஸ் எனப்படும் பிரத்தியேக சிறார் கல்வித் துறையின் தலைவர் டேனியல் அல்-ரஷிட் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட தகுதியை முழுமையாக கொண்டிருக்கும் எஞ்சிய 206 விண்ணப்பதாரர்களை அடையாளம் காணும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரு வார காலத்தில் உதவித் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வழங்கப்படும் தொகை அதிகமானதாக இல்லாவிட்டாலும் நோய்த் தொற்று காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் செலவுகளை ஓரளவு ஈடுகட்ட இந்த தொகை துணை புரியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 1,200 விண்ணப்பதாரர்களுக்கு  மட்டுமே வழங்குவதற்கு போதுமானதாக உள்ளதால் உதவித் தொகையை பொறுவோரின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் மாநில அரசிடம் தற்போதைக்கு இல்லை என்று அவர் சொன்னார்.

இந்த உதவி நிதி திட்டத்திற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தாலும் நம்மிடம் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு மட்டுமே உள்ளது. ஆகவே, தகுதி உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் விண்ணப்பங்கள் துல்லியமாக பரிசீலிக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.


Pengarang :