கட்டாய மரண தண்டனை ரத்து- மலேசியாவின் நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

கோலாலம்பூர், ஜூன் 12- கட்டாய மரண தண்டனையை ரத்து செய்யும் மலேசியாவின் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் (இ.யு.) வரவேற்றுள்ளது.

உலகின் நடப்பு போக்கிற்கு ஏற்ப அந்த கடும் தண்டனையை முற்றாக அகற்றும் முயற்சிக்கான முக்கிய படியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான பேச்சாளர் நபிலா மஸ்ராலி கூறினார்.

இந்த முடிவை மலேசிய அரசாங்கம் விரைவில் சட்டமாக மாற்றும் என ஐரோப்பிய ஒன்றியம் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

மரண தண்டனையை முற்றாக அகற்றும் மலேசியாவின் முயற்சிக்கு முழு ஆதரவைத் தர ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லா காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மரண தண்டனைக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரண தண்டனை என்பது மறுக்க முடியாத வாழ்வுரிமையை மீறும் செயலாக கருதப்படுகிறது. இது மிகவும் கோரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனையாகும். இந்த தண்டனை குற்றங்களைத் தடுப்பதில் தோல்வி கண்டதோடு மனுக்குலத்தின் கௌரவம் மற்றும் உயர்நெறியை ஏற்றுக் கொள்ள இயலாத வகையில் மறுக்கிறது என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

மரண தண்டனையை இன்னும் அமல்படுத்தி வரும் நாடுகளிலும் அத்தண்டனை ரத்து செய்ப்படுவதை உறுதி செய்யும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டாய மரண தண்டனை அகற்றப்பட்டு  அதற்கு பதிலாக நீதிபதியின் விவேகத்திற்குட்பட்டு மாற்றுத் தண்டனை வழங்க அரசாங்கம் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக மலேசியா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.


Pengarang :