NATIONAL

இன உணர்வுகளை தூண்டும்  வகையில் சமூக ஊடகங்களில் செய்தி-  நாடாளுமன்ற  உறுப்பினர்  போலீஸ் புகார்  

கோலாலம்பூர், நவ 27; பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு சமூக ஊடகங்களில் இன சார்ந்த கருத்துக்களை வெளியிடும் தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசியா காவல்துறையை (PDRM) பார்ட்டி அமானா நெகாரா (Amanah) வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடக தளங்களில், குறிப்பாக 15வது பொதுத் தேர்தலின் போது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளைப் பரப்பும் பல இடுகைகளை அமானா சமீபத்தில் கண்டறிந்ததாக கட்சியின் கட்டமைப்பு  இயக்குநர்  முகமட் சானி ஹம்சான் கூறினார்.

இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் இனவாதப் பிரச்சனைகளைத் தூண்டுவதுடன், பல இனங்கள் வாழும் நமது நாட்டில் பிற இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்பைத் விதைக்க முயற்சிக்கும். அதை கட்டுப்படுத்தாமல் விட்டால், இனப் பிளவுக்கு வழிவகுக்கும்.

எனவே நம் புதிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இந்த விஷயத்தில் உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

உலு லங்காட் எம்.பியான முகமட் சானி, இதுபோன்ற இனவெறி மற்றும் மத உணர்வுகளை தூண்டும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுபவர்களைக் காவல்துறை நியாயமாக விசாரித்து தண்டிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில், டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி நூர் டெலிஹான் யஹாயாவைத் தொடர்பு கொண்டபோது, அறிக்கை பெறப்பட்டதை உறுதிசெய்து, இந்த வழக்கு மேல் நடவடிக்கைக்காக புக்கிட் சென்டோசா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

-பெர்னாமா


Pengarang :