NATIONAL

இனவாத அரசியல் மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்- கெஅடிலான் இளைஞர் பிரிவு எச்சரிக்கை

ஷா ஆலம், நவ 30- குறிப்பிட்ட சில கட்சிகளின் இனவாத அரசியல்
மற்றும் அவதூறு பரப்பும் செயல்கள் நாட்டின் ஒற்றுமைக்குப் பேராபத்தைக்
கொண்டு வரும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி இளைஞர்
பிரிவு எச்சரித்துள்ளது.

இத்தகைய அரசியல் நன்னடத்தைக் கோட்பாட்டிற்கும் பண்பு நெறிக்கும்
முரணாகவும் நாட்டின் நிர்வாகக் கொள்கைக்கு எதிராகவும் உள்ளதால்
இவற்றை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று அப்பிரிவின்
தலைவர் இஸூவான் காசிம் கூறினார்.

இதுபோன்ற குறுகிய மனப்போக்கிலான அரசியல் நடவடிக்கைகள்
இனங்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கி பல்லின
மக்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் என்று அவர்
சொன்னார்.

கடந்த 15வது பொதுத் தேர்தல் முடிவுகளின்படி சிலாங்கூர் இனியும்
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கோட்டை கிடையாது என்று
சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல் இளைஞர் பிரிவுத் தலைவர்
முகமது சுக்ரி ஓமார் கூறியிருந்தது தொடர்பில் இஸூவான் இவ்வாறு
கருத்துரைத்தார்.

இனவாத அரசியல் மற்றும் அவதூறுகளுக்கு ஆட்பட வேண்டாம் என
சிலாங்கூரிலுள்ள இளைஞர்களைக் கேட்டுக் கொண்ட அவர், மாநிலத்தின்
நலனை கட்டிக்காப்பதில் ஒன்றிணைந்து செயல்படும்படி வலியுறுத்தினார்.
மாநில மக்களின் நலனுக்காகச் சிலாங்கூர் மாநிலத்தைப் பக்கத்தான்
ஹராப்பான் தொடர்ந்து தன் வசம் வைத்திருப்பதை உறுதி செய்வதில்
மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு முழுக் கடப்பாடு கொண்டுள்ளது
என்றார் அவர்.


Pengarang :