ANTARABANGSANATIONALPENDIDIKAN

பேரிடரை எதிர்கொள்ள சிலாங்கூர் அரசு வெ.70 கோடி ஒதுக்கீடு 

ஷா ஆலம், டிச 5- பேரிடர் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை சிலாங்கூர் மாநில அரசு கொண்டுள்ளது.

இந்நோக்கத்திற்காக தாபோங் வாரிசான் எனப்படும் பாரம்பரிய நிதியிலிருந்து 70 கோடி வெள்ளி பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

 அந்த நிதியை விருப்பம் போல் பயன்படுத்த முடியாது. பேரிடர் ஏற்படும் பட்சத்தில் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே அந்நிதியைப் பயன்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

இதுதவிர, இந்நோக்கத்திற்கு பயன்படக்கூடிய சொத்துக்களும் பங்குகளும் நம்மிடம் உள்ளதோடு போதுமான அளவு ரொக்கக் கையிருப்பையும் கொண்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று செமினி உறுப்பினர் ஜக்காரியா ஹனாப்பி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மாநில அரசு கூடுதலாக 18 கோடி வெள்ளியைச் செலவிட்டதாகவும் அமிருடின் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 12 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிடப்பட்ட வேளையில் எஞ்சிய தொகை மலைச் சரிவுகள் மற்றும் ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டன என்றார் அவர்.


Pengarang :