NATIONAL

பாடாங் செராய், தியோமான் தொகுதிகளில் இன்று வாக்களிப்பு

கோலாலம்பூர், டிச 7- பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தியோமான் சட்டமன்றத் தொகுதிகளில் இன்று காலை தொடங்கி வாக்களிப்பு நடைபெறுகிறது.
பாடாங் செராய் தொகுதியிலுள்ள 132,955 வாக்காளர்களும் தியோமான் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 28,108 வாக்காளர்களும் இன்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது.
பாடாங் செராய் தொகுதியில் 46 வாக்குச் சாவடிகளும் தியோமான் தொகுதியில் 17 வாக்குச் சாவடிகளும் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் என 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தனது அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்த அரசாங்க பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலைப் போலவே இத்தேர்தல்களிலும் வாக்காளர்கள் கைப்பேசியை வாக்குச் சாவடிக்கு கொண்டுச் செல்வது தடை செய்யப் பட்டுள்ளது.
பாடாங் செராய் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம்.கருப்பையா (வயது 69) மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.
அதேபோல் தியேமான் தொகுதிக்கான பெரிக்கத்தான் நேஷனல்  வேட்பாளர் முகமது யூனுஸ் (வயது 61) காலமான காரணத்தால் அத்தொகுதியிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.


Pengarang :