NATIONAL

வாபஸ் வாங்கினாலும் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றியாளர்- தேர்தல் ஆணையம் விளக்கம்

கூலிம், டிச 7- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியிலும் தியோமான் சட்டமன்றத் தொகுதியிலும் சில வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வாபஸ் வாங்கினாலும் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 24ஆம்  தேதி நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர் உறுதி செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே கூறினார்.

போட்டியில் இருந்து விலகுவதாக வேட்பாளர்கள் அறிவித்துள்ள போதிலும் அதிக வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார் என அவர் தெளிவுபடுத்தினார்.

வேட்பு மனுத்தாக்கல் தினத்தன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே தங்கள் வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவர். சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் காரணத்தால் காலை 10.00 மணிக்கு மேல் அவர் அதிலிருந்து பின்வாங்க முடியாது என்றார் அவர்.

இங்குள்ள சுல்தான் பட்லிஷா தேசிய இடைநிலைப்பள்ளியில் வாக்களிப்பை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடாங் செராய் தொகுதிக்கான ஹரப்பான் வேட்பாளர் எம்.கருப்பையா (வயது 69) மற்றும தியோமான் தொகுதிக்கான பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது யூனுஸ் ரம்லி தேர்தல் பிரசார காலத்தின் போது காலமானதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளிலும் இன்று தேர்தல்  நடைபெறுகிறது.


Pengarang :