NATIONAL

நாடாளுமன்றக் கலைப்புக்கும் தேர்தலுக்கும் இடையிலான 60 நாள் கால அவகாசத்தை நீட்டிக்க எஸ்.பி.ஆர். திட்டம்

கூலிம், டிச 8- நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்டப் பிறகு
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள 60 நாள் கால
அவகாசத்தை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை தேர்தல் ஆணையம்
(எஸ்.பி.ஆர்.) பரிசீலித்து வருகிறது.

வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால்
பொதுத் தேர்தல் அல்லது மாநிலத் தேர்தலை நடத்துவதற்குப் போதுமான
நேரம் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைக்க இந்தக் கூடுதல் கால அவகாசம்
வகை செய்யும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல்
கனி சாலே கூறினார்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டப் பின் தேர்தலை நடத்துவதற்கு
60 நாள் கால அவகாசம் உள்ளது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க
நாங்கள் விரும்புகிறோம். இந்த 60 நாள் கால அவகாசம் வெகு காலமாக
அமலில் இருக்கிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து
வரும் காரணத்தால் இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லை
என்றார் அவர்.

முன்பு 1 கோடியே 49 லட்சமாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை
தற்போது 2 கோடியே 11 லட்சமாக அதிகரித்து விட்டது. 18 வயதுக்கும்
மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தலா 500,000
என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருவதையும் நான் கருத்தில் கொள்ள
வேண்டியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்னும் தேர்தலை நடத்தாமலிருக்கும் ஆறு
மாநிலங்களும் ஏக காலத்தில் தேர்தல் நடத்துப்படும் எனத் தாங்கள்
எதிர்பார்ப்பதாகவும் அப்துல் கனி சொன்னார்.

இதன் மூலம் எங்கள் பணி எளிதாகும் என்பதோடு பணியாளர்களையும்
முறையாக ஒருங்கிணைக்க இயலும். தேர்தல் ஏக காலத்தில் நடத்தப்படும்
பட்சத்தில் செலவும் குறையும் என்றார் அவர்.


Pengarang :