NATIONAL

கல்லூரி மாணவர் உள்பட நால்வர் கைது –1.3 கோடி வெள்ளி போதைப் பொருள் பறிமுதல்

ஷா ஆலம், டிச 9- சிலாங்கூர் மாநிலப் போலீசார் புத்ராஜெயாவிலுள்ள இரு
இடங்களில் கடந்த திங்கள்கிழமை மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில்
1 கோடியே 32 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பெத்தமின்
போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு கல்லூரி மாணவர் உள்பட
நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ளப்
பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் போதைப் பொருளை மாற்றும்
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது 22 முதல் 37வயது வரையிலான
அந்நால்வரும் கைது செய்யப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலப் போலீஸ்
தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

அந்த கார் நிறுத்துமிடத்தில் இருந்த டோயோட்டார் வெல்பையர் ரகக்
காரைச் சோதனையிட்ட போது அதில் 350 சீனத் தேயிலை
பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்த 355.75 கிலோ எடையுள்ள
போதைப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என அவர்
சொன்னார்.

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட
இரண்டாவது சோதனையில் 22 சீனத் தேயிலை பொட்டங்கள் மற்றும் ஒரு
பிளாஸ்டிக் பொட்டலத்தில் 23.09 கிலோ போதைப் பொருள் மறைத்து
வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் விநியோகிப்பதற்காக அண்டை
நாட்டிலிருந்து இப்போதைப் பொருள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என
நம்பப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது இரு நிசான் நவாரா வாகனங்கள்,
ஒரு ஹொண்டார் சிஆர்வி வாகனம், ஒரு வங்கிக் கணக்கு புத்தகம், ஒரு கைக் கடிகாரம் உள்ளிட்ட 240,504 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 1952ஆம் ஆண்டு அபாயகாரப் போதைப்
பொருள் சட்டத்தின் 39பி மற்றும் 12(ஏ) பிரிவு, குற்றவியல் சட்டத்தின் 394
மற்றும் 395/170 பிரிவுகளின் கீழ் குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது
தொடக்கக் கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.


Pengarang :