SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்து- பயணிகள் காப்புறுதி இழப்பீடு பெற மாநில அரசு உதவும்

கோம்பாக், டிச 13- கோல சிலாங்கூர், பத்து 16, சுங்கை பாலோங்கில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்தில் சம்பந்தப்பட்ட ஏழு பயணிகள் காப்புறுதி இழப்பீட்டைப் பெற மாநில அரசு உதவும்.

பயணிகள் காயமடைவதற்கு காரணமாக அந்த விபத்துக்காக சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த பஸ் விபத்தில் சம்பந்தப்பட்ட ஏழு பயணிகளும் இன்னும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள உலு கிளாங், டேசா பென்டிடிக் கிராமாட் பெர்மாய் குடியிருப்பாளர்களுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பான போலீசாரின் முழு விசாரணை அறிக்கைக்காக
தாங்கள் காத்திருப்பதாக கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்துக்கு ஓட்டுநரின் கவனக் குறைவு, இயந்திரக் கோளாறு அல்லது சாலை அமைப்பு காரணமாக என்பதை கண்டறிய தாங்கள் ஆய்வினை மேற்க்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார். கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தினால் நடத்தப்படும் அந்த இலவச பஸ் சம்பந்தப்பட்ட அந்த விபத்து கடந்த சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நிகழ்ந்தது.

இவ்விபத்தில் காயமுற்ற இரு சிறார்கள் உள்ளிட்ட பயணிகள் சுங்கை பூலோ மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :