SELANGOR

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் சம்பவங்களைப் படம் பிடித்து அனுப்புவீர்- பொது மக்களுக்குக் குணராஜ் வேண்டுகோள்

கிள்ளான், டிச 15- பொது இடங்களில் சட்டவிரோதமான முறையில்
குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்குப்
பொது மக்களின் உதவியைச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்
குணராஜ் ஜோர்ஜ் நாடியுள்ளார்.

சாலையோரங்களிலும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் பொறுப்பற்ற
நபர்கள் குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொண்டுவதை படம் பிடித்து
அனுப்புவதன் மூலம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் பொது
மக்கள் தங்களுக்கு உதவ முடியும் என்று அவர் சொன்னார்.

இத்தகையச் சட்டவிரோத நடவடிக்கைகளைப் படம் பிடித்து அனுப்புவோரின்
விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என உறுதியளித்த அவர்,
அக்குற்றங்களைப் புரியும் நபர்கள் மீது கிள்ளான் நகராண்மைக் கழகத்தின்
மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அப்படங்கள் பெரிதும் துணை
புரியும் என்றார்.

இங்குள்ள தாமான் கிளாங் ஜெயா வட்டாரத்தில் சட்டவிரோதமாகக் குப்பை
கொட்டும் பகுதியைக் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் பிரபு
மற்றும் குடியிருப்பாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் சென்று கண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இப்பகுதியில் பல முறை துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளப்பட்ட
போதிலும் சாலையோரங்களில் குப்பை கொட்டும் செயல்களைப்
பொறுப்பற்றத் தரப்பினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர்
சொன்னார்.

வீடுகளில் சேரும் இத்தகைய குப்பைகளை வாரத்தில் மூன்று முறை
குத்தகையாளர்கள் அகற்றிய போதிலும் குடியிருப்பாளர்கள் அவற்றை ஏன்
பொது இடங்களில் கொட்டுகின்றனர் என்று தெரியவில்லை. இங்கு
குவியும் குப்பைகள் கால்வாய்களில் விழுந்து நீரோட்டத்திற்கு தடையை
ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் அனைவருக்கும் சிரமத்தை
ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :