NATIONAL

ஸ்ரீ கெம்பாங்கான் இந்திய சமூகத் தலைவர் சுமதியின் வீடு தீயில் அழிந்தது

ஸ்ரீ கெம்பாங்கான், டிச 20- ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவர் திருமதி எஸ்.சுமதியின் வீடு கடந்த 18ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக அழிந்தது.

ஜாலான் தெலாகா ஹிஜாவ், தாமான் செர்டாங் லாமா எனும் முகவரியில்
அமைந்துள்ள அந்த வீட்டில் இரவு 10.00 மணியளவில் இந்த தீவிபத்து
ஏற்பட்டது.

மூன்று பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த போது சமையலறைக்கும் பூஜை
அறைக்கும் இடையே மின் கம்பிகளில் திடீரென் தீப்பற்றியதாக 45
வயதான திருமதி சுமதி கூறினார்.

தீயை அணைக்க நானும் என் பிள்ளைகளும் கடுமையாக முயன்றோம்.
எனினும், பகுதி பலகையிலான அந்த வீட்டை தீ வெகு விரைவாக
சூழ்ந்ததால் கைப்பேசி தவிர வேறு எந்த பொருளையும் எடுக்க முடியாத
நிலையில் நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு விரைந்து வெளியேறி
தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தோம் என்று அவர்
வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்த தீவிபத்தில் தங்களின் வீடு முற்றாக சேதமுற்றதோடு மின்சார
உபகரணங்கள், தளவாடப் பொருள்கள், உடைகள் ஆகியவற்றோடு குடும்ப
உறுப்பினர்களின் அடையாள ஆவணங்களும் அழிந்து விட்டதாக அவர்
சொன்னார்.

மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தாம்
சந்தேகிப்பதாகக் கூறிய திருமதி சுமதி, இந்த சம்பவத்தினால் தங்களுக்கு
ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ஒரு ஒன்றரை லட்சம் வெள்ளியாக இருக்கலாம் என்றார்.

இதனிடையே, தீவிபத்தில் பாதிக்கப்பட்டத் திருமதி சுமதிக்குச் சுபாங் ஜெயா
மாநகர் மன்றம் அத்தியாவசிய உதவிப் பொருள்களை வழங்கி உதவியது.


Pengarang :