முகாம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஊராட்சி மன்றங்களின் அனுமதி தேவை

ஷா ஆலம், டிச 21- முகாமிட்டு தங்கும் வசதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்பினர் அதற்கான அனுமதியை ஊராட்சி மன்றங்களிடமிருந்து பெற்றிருப்பது அவசியமாகும்.

திட்டமிடல் அனுமதி அங்கீகாரத்திற்கேற்ப தங்களின் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது அத்தகைய முகாம் நடத்துநர்களின் பொறுப்பாகும் என்று உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஹோட்டல் அல்லது ரிசோர்ட் நடத்துநர்கள் தங்களின் வர்த்தகத்தின் ஒரு பகுதியாக தற்காலிக தங்குமிட வசதியுடன் கூடிய இத்தகைய முகாம்களை நடத்த விரும்பினால் சம்பந்தப்பட்ட துறைகளிடம் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த பதிவு தெரிவித்தது.

முகாமிடம் நடவடிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை 2007ஆம் ஆண்டு வணிக மற்றும் தொழில் துறையின் துணைச் சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்கள் பரிசீலிக்க முடியும் எனவும் அது தெளிவுபடுத்தியது.

முகாமிடும் நடவடிக்கைகளுக்கான லைசென்ஸ் நடைமுறை எதுவும் இல்லாத காரணத்தால் அத்தகைய விண்ணப்பத்தைத் தங்களால் செய்ய இயலவில்லை என்று ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபாம் முகாம் நடத்துநர்கள் கூறியதாக மலேசியா கினி வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் அந்த ஊராட்சி மன்றம் இந்த விளக்கத்தை வழங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவில் அந்த முகாமில் தங்கியிருந்த 29 சிறார்கள் உள்ளிட்ட 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 61 பேர் மீட்கப்பட்ட வேளையில் மேலும் 25 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Pengarang :