NATIONAL

கட்டாய மரணத் தண்டனை தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்ய அரசு ஒப்புதல்

கோலாலம்பூர், டிச 22- கட்டாய மரணத் தண்டனை தொடர்பான சட்டங்களை
மறுஆய்வு செய்யும் முயற்சிகளைத் தொடர நேற்றைய அமைச்சரவைக்
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் (சட்ட
விவகாரம், நீதித்துறை சீரமைப்பு) டத்தோ அஸாலினா ஓத்மான் கூறினார்.

தண்டனைச் சட்டம் மற்றும் 1971ஆம் ஆண்டு கடும் சுடும் ஆயுதச்
சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டாய மரணத் தண்டனை வழங்க
வகை செய்யும் 11 குற்றங்களுக்கு மாற்றாக முன்மொழியப்பட்ட
தண்டனையை நடைமுறைப் படுத்துவதற்கான கொள்கையைச் சட்டத்
துறை தலைவர் அலுவலகம் ஆய்வு செய்துள்ளது என்று அவர் அறிக்கை
ஒன்றில் கூறினார்.

இது தவிர, தண்டனைச் சட்டம், 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம், 1971ஆம்
ஆண்டு கடும் சுடும் ஆயுதச் சட்டம் மற்றும் 1961ஆம் ஆண்டு ஆள்கடத்தல்
சட்டம் ஆகியவற்றின் கீழ் நீதிபதியின் விவேகத்திற்குட்பட்டு மரணத்
தண்டனை விதிக்கப்படக்கூடிய மேலும் 23 குற்றங்களும் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்ய அரசாங்கம் இணக்கம்
தெரிவித்துள்ளதோடு இந்த சட்டத் திருத்தம் தொடர்பான
மசோதாக்களையும் முன்வைத்துள்ளது என்றார் அவர்.

அவற்றில் 2022ஆம் ஆண்டு தண்டனைச் சட்ட மசோதா, 2022ஆம் ஆண்டு
குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதா, 2022ஆம் ஆண்டு குற்றவியல்
நீதிச் சட்ட மசோதா, 2022ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்ட மசோதா (கடும்
தண்டனை), 2022ஆம் ஆண்டு ஆயுதச் சட்ட மசோதா (திருத்தம்), 2022ஆம்
ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்ட மசோதா (திருத்தம்)
ஆகியவையும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோத்தாக்கள் அனைத்தும் அமலுக்கு வரும் வரை மரணத்
தண்டனை அமலாக்க ஒத்தி வைப்பு தொடர்ந்து அமலில் இருக்கும்
என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கட்டாய மரண தண்டனைக்கு மாற்றாக வேறு தண்டனை விதிக்க வகை
செய்யும் இந்த சட்ட அமலாக்கம், நீதிமன்றங்களால் ஏற்கனவே மரணத்
தண்டனை விதிக்கப்பட்ட 1,327 கைதிகளுக்கு நேரடி விளைவுகளை
ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :