SELANGOR

காக்கைகள் அதிகரிப்பைத் தடுக்க எம்.பி.கே.எஸ். நடவடிக்கை- 2,335 பறவைகள் சுடப்பட்டன

கோல சிலாங்கூர், டிச 23- காக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக்
கட்டுப்படுத்துவதற்காக அப்பறவைகளைச் சுடும் நடவடிக்கையைக் கோல
சிலாங்கூர் நகராண்மைக் கழகம் இம்மாதம் 17ஆம் தேதி மேற்கொண்டது.

இவ்வாண்டில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த
காக்கைகளைச் சுடும் நடவடிக்கையில் லைசென்ஸ் பெற்ற 27 பேர்
பங்கேற்றதாக நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட
இந்நடவடிக்கையில் மொத்தம் 2,335 காக்கைகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக
அது தெரிவித்தது.

காக்கைகளின் அதிகரிப்பினால் பறவை எச்சம், துர்நாற்றம் மற்றும்
இரைச்சல் போன்ற பிரச்சனைகளைப் பாடாங் அஸ்தாகா தங்சோங் காராங்,
தாமான் பெண்டஹாரா, பெக்கான் சுங்கை பூலோ குடியிருப்புப் பகுதிகள்
மற்றும் வணிக மையங்கள் எதிர்நோக்கியதைத் தொடர்ந்து
இந்நடவடிக்கையைத் தாங்கள் மேற்கொண்டதாகப் பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட அந்த அறிக்கையில் நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அப்பறவையினத்தை
ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
காக்கைகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்ய
சுத்தத்தை பேணும்படி வட்டார மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்
என நகராண்மைக் கழகம் கூறியது.

கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகம் மற்றும் கோல
சிலாங்கூர் மாவட்ட கால்நடை இலாகா ஆகிய தரப்புகளின்
ஒத்துழைப்புடன் இந்த காக்கை சுடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :