NATIONAL

வெள்ளம் பாதித்தக் கிழக்கு கரை மாநிலங்களில் ஹெலிகாப்டர் மூலம் பொருள்கள் விநியோகம்

கோலாலம்பூர், டிச 23- கிழக்கு கரை மாநிலங்களில் கடும் வெள்ளம்
காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பொருள்களை
விநியோகிப்பதற்கு இரு ஹெலிகாப்டர்களைத் தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறை பயன்படுத்தவுள்ளது.

மோசமான வெள்ளம் காரணமாகத் தரை மார்க்கவுமாகவும் படகுகள்
மூலமாகவும் பொருள்களைக் கொண்டுச் செல்ல முடியாதப் பகுதிகளுக்குக்
குறிப்பாக கடந்த நான்கு நாட்களாகத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள
கிளந்தான் மாநிலத்தின் குவா மூசா மாவட்டத்திற்குப் பொருள்கள் அனுப்ப
ஹெலிகாப்டர்களை அவசியம் கருதி பயன்படுத்தத் தாங்கள் தயாராக
உள்ளதாக அத்துறையின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் டத்தோ நோர்
ஹிஷாம் முகமது கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக
அந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்று டிவி ஒன்றில் இன்று
ஒளிபரப்பான செலாமாட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை
வெளியேற்றுவதற்கு 10 முதல் 20 டன் வரையிலான லோரிகள் வழக்கமாகப்
பயன்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

வெள்ளம் ஏற்பட்டுள்ள மாநிலங்களில் சுற்றுலா மையங்களுக்குச்
செல்வதைத் தவிர்க்கும்படி பொது மக்களை நோர்ஹிஷாம் கேட்டுக்
கொண்டார்.

பொழுது போக்கு மையங்களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளம் போன்ற
பிரச்சனைகளில் சிக்குவதிலிருந்து தவிர்க்க விரும்பினால் வெள்ளம்
சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லும்
திட்டத்தை ஒத்தி வையுங்கள் என அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :